Tamil blogs | சித்திரமும் கைப்பழக்கம்! | Practice makes a man perfect - story


Boxer image in Tamil bogs


ஒரு ஊரில் சின்னப் பையன் ஒருவன் வாழ்ந்து வந்தான், பெயர் ராமு. அவனுக்கு ப்ருஸ் லீ (Bruce Lee) போலப் பெரிய சண்டை வீரனாக வேண்டும் என்று ஆசை. அவன் தன் முடிவில் மிகவும் தெளிவாக இருந்தான்.

பள்ளி படிப்பு முடிந்தவுடன் தன் ஆசையைப் பெற்றோர்களிடம் கூறினான். அவர்களும் அவன் கொண்டிருந்த ஆர்வத்தை தடுக்கவில்லை. அவனை மேலும் ஊக்கப்படுத்தினர். சண்டை வீரனாவதற்க்கு வேண்டிய உதவிகளைச் செய்யவும் தயாராக இருந்தனர்.

அவன் சண்டை பயிற்சிக்கென இருக்கும் முழு நேர கல்லூரியில் சேர்ந்து அவ்விடமே தங்கி கற்றுக் கொள்ள விருப்பப்பட்டான். அதைத் தன் வீட்டில் உள்ளவர்களிடமும் கூறினான்.

அவர்கள் சற்று தயங்கினர். ‘ராமு அந்தக் கல்லூரிகளில் சேர்ந்தால் பல ஆண்டுகள் நீ அங்குத் தான் இருக்க வேண்டும். எங்களைக் காணுவதற்கான பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவே. உன்னால் பல ஆண்டுகள் பயிற்சி மட்டுமே செய்துக் கொண்டு வாழ இயலுமா?’ என்று கேட்டனர்.

ராமு தெளிவாக இருந்தான், ‘இவை அனைத்தையும் நானும் அறிவேன். நன்கு சிந்தித்த பின் தான் உங்களிடம் கேட்கிறேன். என்னால் இதைச் செய்ய முடியும். என்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. உங்களைக் காணமல் பேசாமல் இருப்பது கடினம் தான், ஆனால் என்னால் அதைச் செய்ய இயலும். அங்குச் சென்று விரைவாகப் பயின்று பெரிய மாவீரனாக வருவேன்’ எனப் பெருமிதத்தோடு கூறினான்.

அவன் பெற்றோர்களும் நண்பர்களும் அவனை உயர்வாக எண்ணினர். இந்தச் சிறிய வயதில் தன் இலக்கின் மீது அவன் வைத்திருந்த பற்றும் ஆர்வமும் அனைவரையும் வியப்படைய செய்தது. அவனை வாழ்த்தி நாட்டிலே சிறந்த சண்டை பயிற்சி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரியில் ராமு


ராமு அங்குச் சென்றவுடன் மிகவும் ஆர்வத்தோடு பயிற்சிகளை மேற்கொண்டான். அவனது ஆற்றலைக் கண்டு ஆசிரியர்கள் வியந்தனர். அவனின் கடின உழைப்பால் சீக்கிரமே அடிப்படை பயிற்சிகளிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

ராமுவும் இதைத் தான் எதிர்பார்த்து காத்திருந்தான். முக்கியமான சண்டை பயிற்சிகளைக் கற்றுக் கொள்வதில் தீவிரமாக இருந்தான்.

அவன் எதிர்பார்த்த நாள் வந்தது. அடுத்த நிலை பயிற்சி தொடங்கும் வேலை வந்தது. ஒரு வயதான ஆசிரியர் அவனுக்குச் சண்டை பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்க வந்தார். ‘இந்த முதியவரா கற்றுக் கொடுக்கப் போகிறார்?’ என்று அவனுக்குள் சிறிய சந்தேகம் இருந்தது.

அந்த முதியவர் ஒரு பெரிய பாத்திரத்தைக் கொண்டு வந்திருந்தார். ‘அநேகமாக இந்தப் பாத்திரத்தை உடைப்பது தான் பயிற்சியாக இருக்க வேண்டும். நாம் எதிர்பார்த்தது நமக்குக் கிடைக்கப் போகிறது’ என்று மனதிற்குள் மகிழ்ந்தான் ராமு.

அந்த ஆசிரியர் அவனை அழைத்தார். ‘அங்கே தெரிகிறதே ஆறு அந்த நீரைக் கொண்டு வந்து இந்தப் பாத்திரத்தை நிரப்பு’ என்று கட்டளையிட்டார்.

‘ஆனால் குருவே, நீர் எடுத்து வருவதற்கான பாத்திரம் எங்கே?’ என வினவினான் ராமு.

‘உன் கைகள். உன் இரு கைகளால் நீரை எடுத்து வந்து நிரப்பு’ என்றுக் கூறிவிட்டு ஓரமாக நிழலில் அமர்ந்தார் ஆசிரியர்.

ராமு இதற்கெல்லாம் சலித்தவன் இல்லை. இதைச் செய்து முடித்தால் சண்டை பயிற்சியைக் கற்றுத் தருவார் என்று உடனே தன் பணியைச் செய்யத் தொடங்கினான். கடுமையான வெயிலை சற்றும் பொருட்படுத்தாமல் நீரை அள்ளி வந்தான்.

அந்தப் பெரிய பாத்திரத்தில் கையால் நீரை எடுத்து வந்து நிரப்பப் பல மணி நேரம் ஆனது. ஒரு வழியாகப் பாத்திரம் நிறைந்ததும் ஆசிரியர் எழுந்து வந்தார்.

‘இப்பொழுது நீ இந்த நீரை உன் கைகளால் அடிக்க வேண்டும், அப்படி செய்யும்பொழுது நீர் பாத்திரத்தின் வெளியே சிந்தும். நீ அவ்வாறு அடித்துப் பாத்திரத்தில் இருக்கும் நீரை குறைக்க வேண்டும். நீர் குறைந்த பின் மீண்டும் ஆற்றுநீரை கைகளால் கொண்டு வந்து நிரப்பி மீண்டும் அடித்துக் குறைக்க வேண்டும். இன்று நாள் முழுக்க நீ செய்ய வேண்டிய பணி இதுவே’ என்று கூறிவிட்டு தன் வேலைகளைக் கவனிக்க சென்று விட்டார்.

‘சண்டை பயிற்சி கற்றுக் கொள்ள வந்தால் இவர் இன்னும் ஏதோ சாதாரண பயிற்சிகளைத் தருகிறாரே’ என்று சிந்தித்தப்படி தன் பணியைச் செய்தான் ராமு.

அடுத்த நாள் நிச்சயம் சண்டை பயிற்சி தான் பாடமாக இருக்கும் என்று ஆர்வத்தோடு வந்த ராமுவிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. மீண்டும் நேற்று செய்த அதே பயிற்சியைத் தொடரும்படி கட்டளையிட்டார். இவ்வாறாகப் பல மாதங்கள் ஓடின. ராமுவிற்கு இது கடும் கோபத்தை தந்தது எனினும் அவன் ஆசிரியர்மீது கொண்ட மரியாதை அவனைப் பேச விடாமல் தடுத்தது.

விடுமுறை


அனைத்து மாணவர்களும் தங்கள் வீட்டுக்குச் சென்று வரச் சில நாட்கள் விடுப்பு அளிக்கப் பட்டது. ராமு விடுதலை கிடைத்தது போலப் பறந்தான். சண்டை வீரனாக வேண்டும் என்ற அவன் இலக்கும் பறந்துவிட்டது. வீட்டுக்குச் சென்றால் அதோடு இங்குத் திரும்பி வரப்போவதில்லை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

வீட்டை அடைந்தான். அங்கு அவன் பெற்றோர்களும் நண்பர்களும் உறவினர்களும் அவன் வருகையைச் சந்தோஷமாகக் கொண்டாடினர். அவ்வபோது நீ அங்குக் கற்றுக் கொண்ட சண்டை பயிர்சியை செய்துக்காட்டு என்று கேட்டு வந்தனர்.

அவன் சண்டைப் பயிற்சி இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை என்பதை கூற தயங்கினான். அதற்கு மாறாக ஒரே பணியைச் செய்தது அவன் நினைவுக்கு வந்து, கோபத்தை தூண்டியது.

‘இன்னொரு நாள் செய்துக் காட்டுகிறேன்’ என்றுக் கூறி பல நாட்கள் ஓட்டிவிட்டான். ஆனால் அவர்கள் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க, ராமுவிற்கு கோபம் தலைக்கு ஏறியது.

‘உங்களுக்குச் சண்டை செய்துக் காட்ட வேண்டுமா?’ என்று சத்தமாகக் கத்தியப்படி முன்னே இருந்த மேஜையை தட்டினான்.

மேஜை இரண்டாக உடைந்தது. பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்களென அனைவரும், ‘இவ்வளவு சக்தியா? மிகவும் அருமை’ என்று பாராட்டத் தொடங்கினர்.

அப்பொழுது தான் ராமுவிற்கு அனைத்தும் புரிந்தது. தினமும் அவனை நீரை அடிக்கச் சொல்லியதன் காரணம், அவன் கைகளைப் பயிற்சிமூலம் வலிமைப் படுத்த தான் என்று. மீண்டும் பயிற்சி பள்ளிக்குச் செல்லும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தான்.

பயிற்சியே சாதாரண மனிதனையும் மாமனிதன் ஆக்கும்!     

தொடர்புடைய பிற கதைகள்:


Tamil blogs | கடத்த போறாங்க | Tamil Short story - Kidnap


    
சுவாரசியமான கதைகள் படிக்க Tamil Stories 4 Everyone குழுவில் இணைந்திடுங்கள்!
                            

Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை