Tamil blogs | புல்லும் சொற்பொழிவும் | Funny story of a speaker

வணக்கம் நண்பர்களே! கொரோனாவோடு வாழ்க்கை எப்படி போகிறது? சற்று நேரம் நகைச்சுவை பக்கம் செல்வோம். இன்று ஒரு அருமையான நகைச்சுவை கதை 'Tamil blogs| புல்லும் சொற்பொழிவும் | Funny story of a speaker' உங்களுக்காகத் தயாராக உள்ளது. படித்து மகிழுங்கள்! 

Mic image in Tamil story blog 'Tamil Stories 4 Everyone'

ஒரு ஊரில் சொற்பொழிவாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். தன் சொற்பொழிவின் மீது அதிக கர்வம் கொண்டவர். பிறரை விடத் தனது சொற்பொழிவே சிறந்தது, தனக்கு மதிப்பு அதிகம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 

எந்த ஒரு சொற்பொழிவாளருக்கும் மிகவும் முக்கியமாக இருக்க வேண்டிய திறன் ஒன்று உள்ளது. அதுவே, மக்களின் மனதை புரிந்து கொள்ளும் பண்பு. அவ்வாறு அறிந்து கொள்ளாமல் விட்டால், சொற்பொழிவைக் கேட்காமல் உறங்கி விடுவர். (உங்களுக்கும் உறக்கம் வருகிறதா;) ? சரி, வேகமாகக் கதைக்குச் சென்று விடுவோம்) 

சொற்பொழிவாளர் தேனப்பன்

அந்தச் சொற்பொழிவாளரை, மேட்டுக்குடி கிராம மக்கள் நேரில் சந்தித்து தங்கள் ஊர் திருவிழாவில் சொற்பொழிவு ஆற்றும்படி வேண்டினர். (சொற்பொழிவாளர் என்று ஒவ்வொரு முறையும் கூற கடினமாக உள்ளது. பெயர் வைத்துவிடுவோம். இனி அவர் பெயர் தேனப்பன்! உங்களுக்குப் பிடித்துள்ளதா? இல்லையெனில் ஒரு பெயரை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். கதையை விட்டு விட்டேன்...தொடருவோம்...)
தேனப்பனுக்கு மிகுந்த மகிழ்ச்சி எனினும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தனது வேலைக்காரனை அழைத்தான். 'முருகா! வரும் ஞாயிற்றுக்கிழமை திருவிழாவாம். அன்று நான் வேறு எங்கும் செல்ல வேண்டி உள்ளதா?' என்று சற்று பாவ்லா செய்தான் தேனப்பன். 

படிக்க வேண்டிய நகைச்சுவை கதை : 

வேலைக்காரன் ஒன்றும் புரியாமல் திருதிருவென விழிக்க, மீண்டும் தேனப்பனே தொடங்கினான், 'தினமும் பலர் என்னைச் சொற்பொழிவு ஆற்ற அழைகிறார்கள். ஞாபகம் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று உன்னை வேலைக்கு வைத்தால், நீ திருதிருவென விழிக்கிறாய். வேறு வேலையாளைப் பார்க்க வேண்டியது தான். சென்று விடு இங்கிருந்து!' என்று இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பாவ்லா செய்தான். 
'ஞாயிறு தானே உங்கள்  விழா. என் சொற்பொழிவால் உங்கள் விழா சிறப்பு பெறும் கவலைப்படாதீர்கள்' என்று ஊர்மக்களின் பிரதிநிதியிடம் கூறினான் தேனப்பன். (இருந்தாலும் இவ்வளவு கர்வம் கூடாது தேனப்பனுக்கு) 
'என்னை ஊருக்கு அழைத்து வர, சிறந்த ஒரு குதிரை வண்டியையும் சொற்பொழிவுக்கான ரொக்கத்தையும் அனுப்ப மறவாதீர்கள்' என்று சிரித்தபடி கூறினான் தேனப்பன். 
'இது வேறா?' என்று மக்களின் பிரதிநிதி மனதிற்குள் எண்ணியபடி, 'நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்!' என்று அவர் பங்கிற்கு ஒரு சிரிப்புடன் உரையாடலை முடித்தார். 
மேட்டுக்குடி மக்கள் வந்த வேலை நிறைவுபெற்ற மகிழ்ச்சியுடன் தங்கள் ஊரை நோக்கிப் புறப்பட்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பிரமாதமாக நடைபெற்றது. 

திருவிழாவிற்கு புறப்பட்டான் தேனப்பன்

ஞாயிற்றுக்கிழமை வந்தது. " 'சொற்பொழிவாளரா இல்லை ராஜாவா?' என்று மக்கள் வியக்க வேண்டும். அப்படியொரு உடை உடுத்தி செல்கிறேன்" என்று கூறியபடி திருவிழா செல்லத் தயாராகினான் தேனப்பன். 
வேலைக்காரனை அழைத்தான், 'முருகா! எங்கடா இருக்க? இங்க வா. எப்படி உள்ளது என் உடை?' என்று தன் அழகைக் கண்டு, தானே பொறாமை கொள்ளும் ஒரு முக பாவனையோடு நின்றான்.
வேலைக்காரன் அவனைக் கண்டு, 'தாம் சொற்பொழிவுக்குச் செல்லவில்லையா? ஏதேனும் விசேஷம் வந்துவிட்டதா?' என்று கேட்டான்.
தேனப்பன் கோபமாக, 'மூடனே! சொற்பொழிவுக்குத் தான் செல்கிறேன். அதிகம் கேள்வி கேட்காதே. அதிக பிரசங்கி!' என்று திட்டினான்.
வேலைகாரன் மனதில் சிரித்துக்கொண்டே, 'மிகவும் அருமையாக உள்ளது ஐயா! என் கண்ணே பட்டுவிடும் போலும்' என்று மேலும் மெருகேற்றினான். 

குதிரைக்காரன்

குதிரை வண்டி ஒன்று தேனப்பனின் வீட்டு வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து குதிரைக்காரன் இறங்கி வந்து, 'ஐயா! சொற்பொழிவாளரை மேட்டுக்குடி திருவிழாவிற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளேன்' என்றான்.
'உனக்காகத் தான் காத்திருந்தேன் புறப்படலாம்' என்று வண்டியில் ஏறினான் தேனப்பன். இருவரும் திருவிழா நடக்கும் இடத்தை அடைந்தனர்.
தேனப்பன் தனது கர்வமான முகபாவனையை திருவிழா முடியும்வரை மாற்றிக் கொள்ளக் கூடாது, இப்படியே பராமரித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவோடு இறங்கினான். நேராக அமைக்கப்பட்டிருந்த மேடையை நோக்கி நடந்தான். 
செல்லும் வழியில் தெரிந்தவர் தெரியாதவர் அனைவரையும் கண்டு கையை அசைத்தபடி மேடையேறினான். பேசுவதற்கு மைக்கை கையில் பிடித்த அந்த நொடி, வானத்திலிருந்து ஒரு சொட்டு நீர் துளி மண்ணில் விழுந்தது. 

பிற நகைச்சுவை கதை : 

சற்று நேரத்தில் அடைமழை அடிக்கத் தொடங்கியது மக்கள் கூட்டம் தம்தம் வீட்டை நோக்கி ஓடியது. தேனப்பனுக்கு அப்படியொரு ஏமாற்றம்.  குதிரைக்காரன் மட்டும் அவனுக்காகக் காத்திருந்தான். 
தேனப்பன் அவனிடம், 'பேசவா? சென்று விடவா?' என்று சைகை செய்தான். குதிரைக்காரன், 'பசியால் ஒரு குதிரை இருந்தாலும் சரி, முப்பது குதிரைகள் இருந்தாலும் சரி, நான் புல்லைக் கொடுக்காமல் சென்றதில்லை' என்றான். அவனின் பதில் தேனப்பானுக்கு கன்னத்தில் அறைந்தது போல இருந்தது. 
எனினும், தேனப்பன் மகிழ்ச்சியோடு, 'என் சொற்பொழிவைக் கேட்கக் காத்திருக்கிறாயா' என்று ஆர்வத்தோடு பேச்சைத் தொடங்கினான். ஆன்மீகம் முதல் சினிமா வரை அனைத்தையும் கலந்து, பல மணிநேர சொற்பொழிவுக்குப் பின் பெருமூச்சுவிட்டான். 
தேனப்பன் பிறகு குதிரைக்காரனிடம், 'எப்படி இருந்தது என் சொற்பொழிவு?' என்று பெருமிதமாகக் கேட்டான். குதிரைக்காரன், 'ஒரு குதிரை பசியோடு இருக்கிறது என்பதற்காக, 30 குதிரைகளின் உணவை ஒரு குதிரைக்கு அளிக்கமாட்டேன்' என்றான். தேனப்பன் அதிகமாக அறுத்ததை குதிரைக்காரன் நாசுக்காகக் கூறிவிட்டான். தேனப்பனின் முகபாவனை மூக்கு அறுபட்டது போல ஆகிவிட்டது.
நண்பர்களே! இந்தப் பதிவில்  உள்ள பிற வித்தியாசமான கதைகளையும் படிக்க மறவாதீர்கள்! நன்றி!! 


Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை