Tamil blogs | Short Story | என் பணம் எனக்குத் தான்!

Money image with story title in 'Tamil Stories 4 Everyone' blog

மனோ மிகவும் கடுமையாக உழைப்பவன். சிறு வயதில் ஏழ்மையில் வாழ்ந்தவன். அவன் அப்பா குடிகாரன். அம்மா கூலி வேலைக்குச் சென்று அவனைச் சிரமப்பட்டு வளர்த்தாள். பண பற்றாக் குறையால் சிறு வயது முதலே அதிக கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவன். பணத்தின் அருமையை அவனைவிட அதிகமாக அறிந்தவர் யாருமில்லை.

சிறுக சிறுக சேமித்த பணம் என்பதால் செலவு செய்ய மனமின்றி கஞ்சம் போல வாழ்ந்தான். இந்தக் கஞ்ச குணமே அவனுக்குக் காலப் போக்கில் நோயாகவும் மாறியது. தன் பணத்தை வீட்டில் இருந்தவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளக் பயந்தான். ஒரு கட்டத்தில் அவர்களுக்காகப் பணம் செலவு செய்யக் கூட யோசிக்க ஆரம்பித்தான்.  

வினோதமான யோசனை


அவன் நிலைமை கண்டு குடும்பத்தினரும் உறவினர்கள் நண்பர்களும் மிகவும் வருந்தினர். பல அறிவுரைகளைக் கூறியும் பலனில்லை. தன் குணத்தினால் பிறர் துன்பப் படுவதையோ துயரம் அடைவதயோ எண்ணி அவனுக்குக் கவலையில்லை. இதனால் மன கஷ்டம் இருந்தாலும் அதியாவசய தேவைகளுக்குப் பண கஷ்டம் என்றும் இருந்ததில்லை. இப்படியே ஓடிக் கொண்டு இருக்க திடீரென ஒரு யோசனை தோன்றியது மனோவின் மனதிற்கு.

வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்துத் தன் சிந்தனையைக் கூறினான். ‘நான் இறக்கும்பொழுது என்னுடன் சேர்த்து நான் சம்பாதித்த அனைத்து பணத்தையும் என்னுடன் வைத்துப் புதைக்க வேண்டும்’ என்றான் மனோ. வீட்டில் உள்ள அனைவரும் ஆடிப் போகினர். அவன் உழைத்துச் சம்பாதித்த பணம் அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; இருந்தாலும் இது கொஞ்சம் அதிகம் தான்.

அடுத்த தலைமுறைக்குக் கொடுக்காமல், பணத்தை தன்னுடன் எடுத்துச் செல்ல நினைக்கும் அவன் முடிவை எண்ணி வருந்தினாள் அவன் மனைவி. ஆனால் இதைக் கண்டு வருந்த முடியுமே தவிர புத்தி சொல்லிப் பயன் இல்லை என்பது அவளுக்குத் தெரியும்.
வருடங்கள் ஓடியது வயது கூடியது. 

தாயின் முயற்சி


முதுமை மனோவிற்கு ஏதேனும் கத்துக் கொடுத்திருக்கும் என்று அனைவரும் எதிர் பார்த்தனர், ஆனால் அப்படி நடக்கவில்லை. பணத்தின் மீது அவன் கொண்டிருந்த பற்று சற்றும் குறையவில்லை. கடைசியாக ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போம் என்று மனோவின் மனைவி முடிவு செய்தாள். தாய் மனம் அல்லவா பிள்ளைக்குச் செல்வம் இல்லாமல் போக எப்படி ஒப்புக்கொள்ளும்.

நாற்காலியில் மனோ சாய்ந்துப் படுத்திருந்தான். அவள் பொறுமையாக அவனிடம், ‘தண்ணி வேணுமாங்க?’ எனக் கேட்டாள். ‘என்னடி திடீர்ன்னு? என்ன விஷயம்?’ சந்தேகத்தோடு கேட்டான். பொறுமையாகக் கேட்கத் தொடங்கினாள், ‘ இல்லைங்க அன்றைக்கு ஒரு நாள் நீங்கச் சொன்னீங்க....’ என்று இழுக்க. ‘என்னடி என்ன சொன்னே அன்றைக்கு?’ சற்று குரலை உயர்த்தினான். அவளின் குரல் இன்னும் உள்ளே சென்று விட்டது.
‘நீங்க அன்றைக்கு இறக்கும்போது பணத்தை எல்லாம் உங்களோட புதைக்கனும் -ன்னு சொன்னீங்க’ எனத் தொடங்கினாள். ’அதுக்கு என்னடி இப்போ? நான் சும்மா ஒன்னும் சொல்லவில்லை. நீ அதைக் கட்டாயம் செய்யனும். கிழவன் தானே அதை மறந்திருப்பான் நினைக்காதே. நீ எனக்கு மனைவி -ங்கறது உண்மைனா அதைச் செய்’ என்று கூறி விட்டுக் கோபமாக எழுந்துச் சென்றான்.

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல ஆகி விட்டது. 'மனைவி என்றால் இதைச் செய்'- ன்னு அழுத்தமா சொல்லிட்டு போயிட்டாரே என்று கவலையோடு இருந்தாள்.

மனோ இறந்து விட்டான்


அந்த நாள் வந்தது. மனோ மாரடைப்பால் இறந்து விட்டான். இறுதி சடங்குகள் நடந்துக் கொண்டு இருந்தது. தன் கணவன் இறந்த துயரம் ஒரு பக்கம் இருந்தாலும் அவன் கூறிய அந்தச் சொற்கள் அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

திடீரென அவள் பிள்ளைகள் இருவரும் அவளிடம் வந்தனர். ’அம்மா, அப்பா சொன்னதுப்போலத் தான் செய்யப் போறீங்களா?’ ஒரு பிள்ளை கேட்க, ‘அந்தப் பணம் நம்மிடம் இருந்தால் கடன் தீரக் கொஞ்சம் உதவியா இருக்கும்’ என்றான் மற்றொருவன்.

‘என்னடா பேசுறீங்க ரெண்டு பேரும். இப்போ இதைப் பத்தி பேசுறதுக்கு ஒண்ணுமில்லை. நான் அவருக்கு மனைவி என்ற முறையில் அவர் சொன்னதை நிச்சயம் செய்யத் தான் போறேன்’ என்று கூறிவிட்டு முடிவாக வெளியே சென்றாள். இது நியாமில்லை என்பது அவளுக்கும் தெரியும்.

புதைக்கும் நேரம் நெருங்கியது. பிள்ளைகளும் முக்கியம் கணவரும் முக்கியம். சட்டென்று அறைக்குள் சென்றாள். வெளியே வரும்பொழுது முகத்தில் அவ்வளவு தெளிவு. புதைக்கும் நேரம், இரு பிள்ளைகளும் அவர்கள் அம்மாவைப் பார்த்தப்படி நின்றனர். சட்டென்று அவள் கையில் இருந்த காகிதத்தைக் குழிக்குள் போட்டாள். இறுதி சடங்குகள் முடிந்தது.

பிள்ளைகள் அவளிடம் ஓடி வந்து ‘என்ன அம்மா காசைப் போடலையா?’ என்று கேட்டனர். ‘போட்டு விட்டேன் அவர் சம்பாதித்த அனைத்தையும் காசோலையாகப் போட்டு விட்டேன், வேண்டுமெனில் அவர் எடுத்துக் கொள்வார்’ என்று கூறி, தன் சொல்லையும் காப்பாற்றி பிள்ளைகளுக்கும் நன்மை செய்த பெருமிதத்தோடு நடக்க தொடங்கினாள்.   

தொடர்புடைய பிற கதைகள்:


Tamil blogs | பணக்காரர் வீட்டு விருந்து! ! Mullah at grand food party- short story


         
நண்பர்களே! இந்தக் கதை 'Tamil blogs | Short Story | என் பணம் எனக்குத் தான்!' உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் பல சுவாரஸ்யமான கதைகள் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அவற்றைப் படிக்க 'Tamil Stories 4 Everyone' குழுவில் இணைத்திடுங்கள்! 

Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை