Tamil blogs | கருத்து நிறைந்த திருடன் கதைகள் | Moral thief stories


வணக்கம் நண்பர்களே! திருடர் கதைகள் பல கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தத் திருடர்களின் கதை 'Tamil blogs | கருத்து நிறைந்த திருடன் கதைகள் | Moral thief stories' சற்று வித்தியாசமானவை. இந்த இரண்டு கதைகள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்!


Thief image in Tamil blogs 'Tamil Stories 4 Everyone'



கதை 1:

திருடச் சொல்லும் தந்தை! 


திருடன் ஒருவன் தன் மகன் வளர்ந்ததும் அவனையும் தன் தொழிலில் ஈடுபடுத்த நினைத்தான். பையனும் இளமை பருவத்தை அடைந்து வேலைக்குச் செல்லும் நிலையை அடைந்தான்.

இதுவே சரியான நேரம் என்று தன் மகனிடம், "நீ வேலைக்குச் செல். அங்கு இருக்கும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடிக் கொண்டு வா" என்றான். மகன் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்தான்.

பின்னர், "சரி அப்பா! திருடிக் கொண்டு வருகிறேன்" என்று கூறினான். திருடன், "சீக்கிரமே நாம் செல்வந்தர் ஆகிவிடுவோம்" என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். இளைஞனும் தனக்கு கிடைத்த வேலைக்குப் புறப்பட்டான்.

மாலை தன் மகனை எதிர்பார்த்து காத்திருந்தான் திருடன். ஆனால், அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அவன் நினைத்தது போல அவன் மகன் எதையும் திருடி எடுத்து வரவில்லை.

"மகனே! நான் உன்னிடம் என்ன கூறினேன்? ஏன் எதையும் திருடி வரவில்லை?" என்று கேட்டான்.

"அப்பா நான் திருடலாம் என்று முயற்சி செய்யும் வேளையில், என்னை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார். எனவே, என்னால் திருட முடியவில்லை" என்றான் மகன். "சரி நாளைத் திருடிக் கொண்டு வா" என்றான் திருடன்.

அடுத்த நாள் மகன் மீண்டும் வெறும் கையோடு வந்தான். திருடனிடம், "இன்றும் அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா. எனவே, என்னால் திருட முடியவில்லை" என்றான்.


அடுத்த நாளும் மகன் அதையே கூற கோபமடைந்தான் திருடன். "உன்னைத் தினமும் பார்த்துக் கொண்டிருப்பது யார் என்று கூறு" என ஆவேசமாகக் கேட்டான்.



அதிரடியான நகைச்சுவை கதை (Recommended) : Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

"அவர் தான் அப்பா 'இறைவன்'. எப்பொழுதும் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவர் முன் தவறு செய்ய என்னால் முடியவில்லை" என்று மகன் கூறினான்.

திருடன் கண்கள் கலங்க தன் மகனை அணைத்துக் கொண்டு, "என்னை மன்னித்து விடு மகனே! என் தவறை உணர்ந்து கொண்டேன்" என்று மனதார மன்னிப்பு கேட்டான்.

கதை 2 :


குருவும் திருடனும்


இரவு நேரம் சீடர்களும் குருவும் உறங்கிக் கொண்டிருந்தனர். திருடன் ஒருவன் ஆசிரமத்திற்குள் நுழைந்து விட்டான். மெதுவாக அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களைத் திருடித் தன் பையினுள் போட்டுக் கொண்டான்.

அந்த நேரம் ஒரு சீடனுக்கு திடீரென விழிப்பு வரத் திருடனை பார்த்துவிட்டான். "திருடன்! திருடன்! எல்லோரும் எழுந்திருங்கள்!" என்று கூச்சலிட்டான். சற்று நேரத்தில் திருடனை சுற்றி அனைவரும் விழித்துக் கொண்டனர்.

நன்கு மாட்டிக்கொண்ட திருடனை அடித்து உதைத்து குருவிடம் அழைத்துச் சென்றனர். குரு அந்தத் திருடனிடம், "நீ ஏன் திருடுகிறாய்? பார்க்கச் சிறிய பாலகனாகத் தெரிகிறாய் உழைத்து உண்ணலாம் அல்லவா?" என்று கனிவாகக் கேட்டார்.

"என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு யாரும் இல்லை வயிற்றுப் பசிக்காகத் திருடிவிட்டேன்" என்றான் திருடன்.
"சரி, இனி நீ இங்கேயே இருக்கலாம். உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன்" என்றார் குரு. மற்ற சீடர்களுக்கு இது சற்றும் பிடிக்கவில்லை.

"திருடனுடன் சேர்ந்து படிப்பதா?" என்று கோபம் அடைந்தனர். அந்தத் திருடனை எப்படியாவது ஆசிரமத்தை விட்டுத் துரத்த வேண்டும் என்று திட்டம் தீட்டினர்.

ஒரு நாள் இரவுச் சீடர்கள் தங்கள் பொருட்களை மறைத்து வைத்து விட்டனர். அடுத்த நாள் குருவிடம் சென்று, "அந்தத் திருடனை இங்கிருந்து அனுப்பி விடுங்கள். எங்கள் பொருட்களை மீண்டும் திருடிவிட்டான்" என்று பொய்யாகக் குற்றம் சாட்டினர்.

ஒன்றும் அறியாத அந்தத் திருடன், "ஐயா! நான் எதுவும் திருடவில்லை. நான் திருந்தி விட்டேன். என்னை நம்புங்கள்!" என்று அழத் தொடங்கினான்.

"அழுது நடிக்காதே! இங்கிருந்து சென்றுவிடு" என்று சீடர்கள் மனதிற்குள் சிரித்துக் கொண்டே கூறினர்.


அனைவரின் நடவடிக்கையும் கூர்ந்து கவனித்த குரு, "பொறுமையாக இருங்கள்! சரி, உங்கள் பொருட்களைத் திருடியது அவன் தானே? அவ்வாறு எனில் அவனுக்கு இன்னும் ஞானம் வரவில்லை. உங்கள் அனைவருக்கும் ஞானம் போதுமான அளவு இருக்கிறது. எனவே, நான் கற்று தர வேண்டியது அந்தத் திருடனுக்கு தான் உங்களுக்கு இல்லை. நீங்கள் அனைவரும் இங்கிருந்து சென்று விடுங்கள்" என்று சிரித்த வண்ணம் கூறினார்.

திருடன் கண்களில் நீர் வழிய அவர் காலில் விழுந்து வணங்கினான். சீடர்கள் வாயடைத்துப் போயினர்.

'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பதற்கு போலச் சீடர்கள் தீட்டிய திட்டம் அவர்களுக்கு எதிராகவே முடிந்தது. நல்ல ஒரு குருவை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் அனைவரும் தாங்கள் செய்த உண்மையை ஒப்புக் கொண்டனர்.

குரு அதற்குச் சிரித்துக்கொண்டே தெரியும் சீடர்களே, "ஒருவன் செய்யும் செயலே அவன் உயர்ந்தவனா தாழ்ந்தவனா என்பதை முடிவு செய்யும். மனம் மாறிய திருடனை உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளுங்கள். கடந்த காலத்தில்  தவறுகள் செய்தாலும் ஞானம் அடைந்ததும் தன்னை திருத்திக் கொண்டான் திருடன். ஆனால், நீங்கள் ஞானம் அடைந்த பின்பும் இத்தகைய ஒரு செயலைச் செய்துள்ளீர்கள். இப்பொழுது உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர் யார்?" என்று கேட்கச் சீடர்கள் அனைவரும் வெட்கத்தில் தலை குனிந்தனர். இனி இப்படியொரு தவறை செய்யமாட்டோம் என்று வாக்களித்தனர்.

நண்பர்களே இரண்டு திருடனின் கதையும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் மேலும் பல வித்தியாசமான கதைகளைத் தெரிந்துகொள்ள 'Tamil Stories 4 Everyone' உறுப்பினராக இணைந்திடுங்கள்! நன்றி!!!


Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை