Tamil blogs | நேர்மையான கடத்தல்காரன்! | Funny short story of an honest smuggler


Police and citizen image in Tamil blogs


ஒரு ஊரில் கடத்தல்காரன் ஒருவன் இருந்தான். மற்ற கடத்தல் காரர்களை போல இல்லாமல் சற்று விநோதமானவனாக இருந்தான். தன்னை ஒரு ‘நேர்மையான கடத்தல்காரன்’ என்றுக் கூறி வந்தான். கடத்தல் நேர்மையற்ற தொழிலாக இருக்கும்பொழுது அவன் தன்னை நேர்மையானவன் எனக் கூறி கடத்தல் செய்வது வியப்பாக இருந்தது.

தான் கடத்தல் தொழில் செய்வதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வான். அவ்வளவு என்ன காவலர்களுக்கே தெரியும் அவன் கடத்தல்காரன் என்று. ஆனால் இன்று வரை எந்தக் காவலர்களாலும் அவன் செய்யும் கடத்தலை தடுத்து நிறுத்த முடிந்தது இல்லை.

அதற்குக் காரணம் அவன் என்ன கடத்துகிறான் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க இயன்றதில்லை. தினமும் விடியற்காலையில் கழுதையுடன் நாட்டின் எல்லையைத் தாண்டிச் செல்லுவான் பொழுது சாயும் வேளையில் சில சரக்குகளை ஏற்றி வருவான்.

புதிய காவலர்


ஒரு நாள் அந்த ஊருக்குப் புதிய காவலர் ஒருவர் பணி புரிய வந்தார். இதற்கு முன்பு அவர் வேலை செய்த அனைத்து ஊரிலும் நடந்த கடத்தலை எளிமையாகக் கண்டுபிடித்துப் பல பரிசுகளைப் பெற்றவர் அவர். அந்த ஊரின் எல்லை பகுதியில் பணி அமர்த்தப்பட்டிருந்தார்.

அந்த ஊருக்கு வந்தவுடனே அவர் கேட்டு அறிந்த முதல் தகவல் அங்கு நடக்கும் கடத்தல் தொழில்பற்றித் தான். அப்பொழுது தான் ‘நேர்மையான கடத்தல்காரன்‘ பற்றிய தகவலைக் கேட்டறிந்தார். இது அந்தக் காவலருக்குச் சற்று வியப்பையும் ஆர்வத்தையும் தந்தது.

எப்படியேனும் அவன் செய்யும் கடத்தலை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கடத்தல்காரன் எப்பவும் போலக் காலையில் தன் கழுதையுடன் கிளம்பினான். எல்லையைத் தாண்டும்பொழுது அவனை நன்றாகச் சோதனை செய்தார் புதிய காவலர். ‘தாம் புதிதாக வேலைக்கு வந்துள்ளீர்களோ?’ என்று புன்னகையோடு கேட்டான் கடத்தல்காரன்.

‘ஆம். உன்னைப் பற்றியும் நான் கேள்விப் பட்டுள்ளேன். நீ செய்யும் கடத்தலை கண்டுபிடிக்காமல் இங்கிருந்து செல்லமாட்டேன்’ என்று திரைபட நாயகன்போலப் பதில் உரைத்தார். கடத்தல்காரன் புன்னகைத்தப்படி எல்லையைத் தாண்டிச் சென்றான். மாலை அவன் வருகைக்காக ஆர்வமாகக் காத்திருந்தார் காவலர். எதிர்பார்த்தப்படி கடத்தல்காரன் வந்தான். தன் கழுதையின் பின் காய்ந்த புல்லை அதிகமாக ஏற்றி வந்தான்.

காவலர் அந்தப் புல்லை நன்றாகச் சோதனை செய்தார், எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன், ‘இன்று நீ தப்பித்திருக்கலாம் நாளை மாட்டுவாய்’ என்றுக் அவனை நோட்டமிட்டார் காவலர்.

கடத்தல்காரனோ, ‘நான் கடத்தத் தான் சென்றேன். இப்பொழுதும் கடத்தி தான் வருகிறேன். நாளைச் சந்திப்போம் சார்’ என்று கூறி நகர்ந்தான்.

காவலருக்கு இரவு முழுவதும் உறக்கம் இல்லை ‘என்னவாக இருக்கும்?’ என்று சிந்தித்துக் கொண்டே இருந்தார். அப்பொழுது தான் அவர் மனதிற்கு பட்டது, ‘அவன் அணிந்திருந்த தொப்பியைக் கவனிக்காமல் விட்டோமே என்று. நாளை அதைச் சோதிக்க வேண்டும்’ என்று சிந்தித்த வண்ணம் கண் அயர்ந்தார்.

காலையில் மீண்டும் அவன் தொப்பியோடு எல்லையைத் தாண்டினான். அதைக் கவனித்துக் கொண்டிருந்தார் காவலர். மாலை அவன் வந்தவுடனே ‘உன் தொப்பியைக் கழற்றிக் கொடு’ என்று வாங்கி சோதனை செய்தார், ஒன்றுமே கிடைக்கவில்லை. ஏமாற்றத்தோடு அவனை எல்லையினுள் அனுமதித்தார்.

இன்னும் சிந்தித்தார், ‘அந்தக் கழுதை! அவனுடன் எப்பொழுதும் வரும் அந்தக் கழுதையின் வாயை நான் இதுவரை சோதனை செய்யவில்லை. அதன் வழியாகத் தான் அவன் கடத்தியிருக்க வேண்டும்’ என்று முடிவாக இருந்தார் காவலர்.

அடுத்த நாள் மாலை அந்தக் கழுதையின் வாயைத் திறக்கும்படி கூறினார். அவர் நினைத்தது தவறாக முடிந்தது. அதன் வாயிலும் எதுவுமில்லை. இவ்வாறு பல முறை முயற்சி செய்தும் ஏமாற்றமே கிடைத்தது.

ஒரு நாள் மிகவும் தீர்மானமாக ‘இன்று எப்படியாவது அவன் என்ன கடத்துகிறான் என்பதை நாம் கண்டுபிடித்தே ஆக வேண்டும்’ என்று முடிவு செய்தான்.

பின்தொடரும் திட்டம்


காலையில் எல்லையைத் தாண்டிச் சென்றான் கடத்தல் காரன். மாலை அவன் வீடு திரும்பும் வேளையில் அவனைப் பின் தொடர்ந்து சென்றார் காவல்காரர். எல்லையிலிருந்து நேராக அவன் வீட்டிற்கு சென்றான். வீட்டு வாசலில் கழுதையை கட்டி விட்டு அதன் மீது இருந்த  காய்ந்த புல் கட்டை வீட்டிற்குள் எடுத்துச் சென்றான். ‘நாம் நினைத்தது போல அந்தப் புல் கட்டில் தான் ஏதோ உள்ளது’ என்று அவன் வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.

அவன் நேராக அந்தப் புல் கட்டை எடுத்துச் சென்று ஓரமாக வைத்து விட்டு, சாப்பிட்டு தூங்கிவிட்டான். காவலருக்கு ஒரே ஆச்சிரியம் ‘இவன் நாம் நினைத்ததை விட மிகவும் புத்திசாலியாக இருக்கிறான்’ என்று ஏமாற்றத்தோடு அவர் வீட்டிற்கு சென்றார்.

காவலருக்குப் புதிய ஊரில் பணிமாற்றம் கிடைத்தது. அந்தக் கடத்தலை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். நேராக அந்தக் கடத்தல்காரன் வீட்டிற்கு சென்றான். ‘என்னால் நீ என்ன கடத்துக்கிறாய் என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை. நாளை மாலை நான் வேறு ஊருக்குச் செல்கிறேன். நீ என்ன கடத்துகிறாய் என்பதை என்னிடம் சொல்லுவாயா? நான் இதை யாரிடமும் சொல்லமாட்டேன். கடைசி வரை இது நம் இருவருக்கும் இடையே ரகசியமாக இருக்கும்’ என்று அவர் பணியின் மீது சத்தியம் செய்தார்.

‘சார், நான் கடத்தியது பொன்னோ பொருளோ அல்ல. நான் கடத்துவது ‘கழுதை(யை)' தான்’ என்று கூறினான் கடத்தல்காரன். காவலர் ஆச்சிரியத்தில் உறைந்தார்.                      

தொடர்புடைய பிற கதைகள்:  
   

Tamil blogs | யாரு சார் நீங்க? | Short Tamil Story of a stranger


  
Tamil Stories 4 Everyone’ தொடர்பதிவில் மேலும் பல கதைகள் காத்திருக்கிறது. எனவே, குழுவில் இணைந்திட மறந்துவிடாதீர்கள்!

  

Comments

  1. கதை வித்தியாசமாகவும் அற்புதமானதகவும் இருந்தது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை