Tamil blogs | ஊரில் என்ன விசேஷம்? | Short story of wise village boy


village festival wordings image at Tamil blogs

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ன்னு சொல்லுவாங்க. ஒரு விஷயத்தை முடிக்கனும் முடிவு பண்ணிடால், புத்தியுள்ளவன் எப்படியும் அதைச் செய்துக் காட்டிவிடுவான். அப்படி பட்ட ஒரு கதை தான் இது. முடியாது என்று கூறிய ஒரு செயலை முடித்துக் காட்டிய கதை.

ஊரின் சாலைகள் முழுவதும் வண்ண விளக்குகள். தோரணமும் வரவேற்பு பலகைகளும் வழி எங்கும் காணப்பட்டது. என்ன விஷேசமாக இருக்கும் என ஊர் மக்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். ஆனால், ஏற்பாடுகளைப் பார்த்தால் நிச்சயம் அந்த ஊர் ராஜா கலந்துக் கொள்ளபோகும் நிகழ்ச்சியாகத் தெரிந்தது.

ரகுவின் கதை


ரகு அந்த ஊரில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன். வீட்டின் ஏழ்மை காரணமாகச் சிறு வயதில் படிப்பைப் பாதியிலே விட்டு விட்டு வேலை செய்ய ஆரம்பித்தான். தன் கழுதையோடு தினமும் ஊர் சுற்றி அனைவரிடம் இருந்தும் அழுக்குத் துணிகளை வாங்கி வருவான்.

ஆற்றங்கரை ஓரத்தில் அனைத்து துணிகளையும் துவைத்து கொண்டு வருவான். வயிற்று பிழைப்பிற்காகத் தினமும் வேலை செய்யும் அவனுக்கு நண்பர்களென்று யாரும் இல்லை. ஆனால் அதைப் பற்றி அவன் என்றும் கவலை கொண்டதில்லை. 

படிப்பைப் பாதியிலே கைவிட்டாலும் கல்வியின் மீது அவன் அதிக ஆர்வம் கொண்டிருந்தான். ஒவ்வொரு வீட்டிலும் துணிகள் வாங்கும்போது ‘அய்யா நீங்கள் படித்த முடித்த புத்தகங்கள் ஏதேனும் உள்ளதா? இருந்தால் கொடுங்கள் படித்து முடித்து விட்டுப் பத்திரமாகத் தந்துவிடுவேன்’ என்று கேட்டு வாங்குவான்.

அனைவருக்கும் பழக்கப் பட்ட பண்பான பையன் என்பதால் அனைவரும் யோசிக்காமல் புத்தகத்தைத் தருவர். துணிகளைத் துவைத்து பின் அவை காயும் நேரத்தில் புத்தகங்களைப் படிப்பான். பள்ளிக்குச் செல்லாமலே மிகுந்த அறிவு கொண்டிருந்தான்.

எப்பொழுதும் போல ரகு ஊரின் சாலை வழியே செல்லும்பொழுது அலங்காரங்களைக் கண்டான். ‘என்ன விஷேசமாக இருக்கும்? யாரையாவது கேட்டுப் பார்ப்போம்’ என்று ஓரமாக நின்றுக் கொண்டிருந்த சில இளைஞர்களை நோக்கி நடந்தான்.

‘ஊரில் என்ன விஷேசம்? உங்களுக்குத் தெரியுமா?’ என்று வினவினான். கூட்டமாக இருந்த அந்த இளைஞர்கள், ‘என்ன நிகழ்ச்சியா இருந்தால் உனக்கு என்ன? துணி துவைக்கும் பையன் நீ அதில் கலந்துக் கொள்ள போகிறாயா?’ என அவனைக் கேலி செய்து பேசினர்.

‘துணி துவைப்பதால் என்ன இழிவு? என்னால் அந்த நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துக் கொள்ள இயலும்’ என்று தன்னம்பிக்கையோடு கூறினான் ரகு.
‘நடப்பது பெரிய இடத்து நிகழ்ச்சி. ராஜா வருவதால் பாதுகாப்பு பலமாகப் போடப் பட்டிருக்கிறது. பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை. நாங்களே நினைத்தாலும் உள்ளே செல்ல இயலாது. நீ எப்படி செல்லுவாய்?' எனச் சிரித்தது இளைஞர் கூட்டம்.

‘உள்ளே செல்வது என்ன, நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்துக் காட்டுகிறேன்’ எனச் சவால் விட்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டான் ரகு.

பிரம்மாண்டமாக இருந்த அந்த இடத்தை அடைந்தான். நிகழ்ச்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ராஜாவின் வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர். தன் கழுதையோடு அந்த இடத்தைச் சுற்றி நோட்டமிட்டான் ரகு.

சற்று நேரம் சிந்தித்தான் பின் நேராக உள்ளே செல்ல முயன்றான். வாசலில் இருந்த காவலாளிகள் அவனைத் தடுத்து நிறுத்தினர். ‘யார் நீ? பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை என்பது உனக்குத் தெரியாதா?’ எனக் கேட்டார் காவலன்.

‘பொதுமக்கள் தானே உள்ளே செல்லக் கூடாது. நான் மிகவும் முக்கியமான ஒருவன்’ எனக் கூறி உள்ளே செல்ல முயன்றான். ‘நில். நீ யாரெனக் கூறிய பின் செல்லலாம்’ எனத் தடுத்து நிறுத்தினான் காவலன்.

‘நான் மிகவும் முக்கியமான தகவல் ஒன்றை கொண்டு வந்துள்ளேன். அதை உன்னிடம் கூற இயலாது. என்னை உள்ளே விடமால் தடுத்தால், நீ இந்தச் செயலுக்காகப் பிற்காலத்தில் வருத்தப்படுவாய்’ என ரகு சத்தமாகக் கூறினான்.

உள்ளே நுழைந்த ரகு


காவலாளி சற்று நேரம் சிந்தித்தான். அந்த நேரத்தை ரகு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டான். ‘இந்தக் கழுதையை பிடி இதைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’ என்று காவலாளியின் கையில் கழுதையை ஒப்படைத்து உள்ளே நுழைந்தான்.

நேராகச் சென்று முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்துக் கொண்டான். இதைக் கவனித்த மற்ற காவலாளிகள் ஓடோடி வந்தனர். ‘யார் தம்பி நீ? இங்கே அமரக் கூடாது. எழுந்து செல்’ என அவனை எழுப்ப முயன்றனர்.
‘நான் இந்த நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமானவன். நான் இங்கே தான் அமருவேன்’ என்று எழுந்துக் கொள்ளாமால் அடம் பிடித்தான் ரகு.

ராஜா வரும் நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது. ‘இந்த ஊரிலே முக்கியமானவர் ராஜா தான். நீ அவரைவிட முக்கியமானவனா?’ என்று கேள்விக் கேட்க, ‘ஆமாம்’ எனத் தைரியமாகப் பதில் அளித்தான்.

இதைக் கவனித்த படி உள்ளே நுழைந்தார் ராஜா. ராஜாவைப் பார்த்ததும் எழுந்து நின்றான் ரகு. காவலாளிகள் நடந்ததை ராஜாவிடம் கூறினர். ராஜா ரகுவிடம், ’இந்த நாட்டு அரசனை விட உயர்ந்தவர் யாருமில்லை. நீ யார்?’ எனக் கேட்டார்.

‘அரசே, இந்த நாட்டு மன்னனை விட முக்கியமானவர் யாருமில்லை. நான் தான் அந்த ‘‘யாருமில்லை’’’ என ரகு கூற, ராஜா சிரித்தார். அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்து, ’உன் கல்வி ஆர்வத்திற்கு வறுமை இனி தடையில்லை. படிப்பை முறையே படிக்க வேண்டிய உதவியை நான் ஏற்றுக் கொள்கிறேன். உன் கல்வி முடிந்ததும் என்னுடன் அரசபையில் இணைந்து நீ பணியாற்றலாம்’ என்று கூறினார். அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அவனுக்குச் சிறப்பு அனுமதியும் அளித்தார்.

தொடர்புடைய பிற கதைகள்:

Tamil blogs | அவள் எப்படி தப்பித்தாள்? | Short story of wise girl

மேலும் பல கதைகள் படிக்க ‘Tamil Stories 4 Everyone குழுவில் இணைய மறந்துவிடாதீர்கள்!!!



Comments

Popular posts from this blog

Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு

Tamil blogs | வாழ்க்கை நீதிகளை சொல்லும் துறவி கதைகள்

Tamil blogs | வந்தா '5௦௦௦' போன '50' | நகைச்சுவை

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Tamil story blogs | விதியை மதியால் வெல்லலாம் | சிறுகதை